×

திருமண வரமருளும் சோழீஸ்வரர்

அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் – 10.09.2023

அருள்மிகு சௌந்தர நாயகி – பரிமள சுகந்த நாயகி சமேத, அருள்மிகு சோழீஸ்வர ஸ்வாமி (அக்னீஸ்வரர்) திருக்கோயில் குத்தாலத்தில் (திருத்துருத்தி) அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலுக்கு, வரும் 10.09.2023 அன்று அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. இக்கோயிலின் மகிமை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

வழிவழி வந்த செய்தியின் படி, பரமேஸ்வரின் திருக்கல்யாண தரிசனம் கிடைக்காமல் போன சில மகரிஷிகள், இறைவனது திருமணக்கோலத்தை தரிசிக்க வேண்டுமென பிரார்த்தனை செய்ய, இறைவனும் அவர்களை புண்ய பூமியான குத்தாலம் (திருத்துருத்தி) சென்று தவம் இயற்ற உத்தரவிட்டார். தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற அம்பிகையை, யாககுண்டத்தில் அவதரிக்கச் செய்து, திருமணம் செய்து கொண்ட இடமே திருத்துருத்தி என்கிற குத்தாலமாகும்.

விக்கிரம சோழனின் மனைவி கோமலை என்பவருக்கு தீராத தோல்வியாதியை நீக்கிய இறைவன். அக்னி பகவான் வழிபட்டதால், அக்னீஸ்வரர் என்றும் சோழ மன்னன் திருப்பணி செய்து வழிபட்டதால் சோழீஸ்வரர் என்றும் பெயர் பெற்றவர். அக்னி பகவானின் பாவங்களை போக்கியவர். சித்தர்கள், முனிவர்கள், ஞானிகள், சனீஸ்வர பகவான், ஆஞ்சநேயர் வழிபட்ட இறைவன். புராண வரலாற்றின்படி, ஸ்ரீஅக்னி பகவானால் தேவதச்சன் விஸ்வகர்மனைக் கொண்டு, கோயில் கர்ப்பக்கிரகம் முதலாக ஆலயத்தை அழகுபட அமைத்த இரண்டு சக்தி ஆலயங்களும், சுற்று கடவுள்களும் நிலை பெறச் செய்ததாக கூறப்படுகிறது.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, சோழ மன்னர்களால் கருங்கற்களைக் கொண்டு அழகிய கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், முன் அம்பாள் மண்டபம் மற்றும் இதர சுற்றுக் கோயில்களும் இரண்டு பிராகாரங்களுடன் முழு அம்சங்களுடன், கீழ்த்திசை பார்க்க அமைந்த இவ்வாலய முகப்பில் ஏழுநிலை ராஜகோபுரம் அழகிய சிற்பங்களுடன் வானளாவ ஓங்கி நின்று இறைவன் திருவடி தரிசனம் காட்டி வருகிறது. ஸ்ரீபரிமள சுகந்த நாயகி ஆலயம் உட்பிராகாரம் கிழக்கு நோக்கியும், ஸ்ரீசௌந்தர நாயகி ஆலய முகப்பு மண்டபத்துடன் தெற்கு நோக்கி அமைந்துள்ளன.

பாதாளம் வரை வேரோடு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீபாதாள சனீஸ்வரர் சிறப்புவாய்ந்ததாகும். திருத்துருத்திப் புராணத்தில், `அக்னிலிங்கப் படலம்’ மற்றும் `சோழீசப் படலம்’ ஆகியவை இத்திருக்கோயிலின் பெருமைகளைப் பதிவு செய்கின்றன. ஸ்ரீசௌந்தரநாயகி, `ஸ்ரீசக்ரபீட நிலையாய நமஹ’ என்று ஸ்ரீலலிதா சகஸ்ரநாம வடிவிலும், ஸ்ரீபரிமள சுகந்தநாயகி, `பிந்து தர்பண விந்துஷ்டாயின நமஹ’ என்ற வடிவில் அமர்ந்தும் அருள்புரிகிறாள். இங்குள்ள சௌந்தரநாயகியின் திருப்பாதத்தில் தேங்காயை வைத்து வழிபட்ட வேண்டிய அனைத்தும் நிறைவேறுகின்றன.

இந்த இறைவனை ஆஞ்சநேயர், தாமரைப்பூ கொண்டு வழிபட்டு வந்துள்ளார். இங்கு தஞ்சாவூர் அரண்மனைக்கு செல்லும் சுரங்கப்பாதை ஒன்றும் உண்டு. பரிமளசுகந்த நாயகி பரதமுனிவர் பிள்ளைப்பேறு வேண்டி புத்திர காமேஸ்டி யாகம் செய்தார். அந்த வேள்வியில் தோன்றியவர்தான் பரிமளசுகந்தநாயகி. இறைவனை அடைய இத்தலத்தில் தவம் மேற்கொண்டுள்ளாள். இத்தலத்து பரிமளசுகந்தநாயகியை வழிபட திருமண தடைகள் நீங்கி திருமணம் கைகூடும்.

பாதாள சனீஸ்வரர்

சனி பகவான் சுயம்பு மூர்த்தியாக பாதாளத்திலிருந்து தோன்றி வழிபட்ட தலம் குத்தாலம். சனி பகவான் கையில் அமிர்த கலசத்தோடு இருப்பது சிறப்பாகசித்தர்களும், முனிவர்களும் தவம் மேற்கொண்டு இங்கு இறைவனை வழிபட்டனர். சனி பகவான் அவர்களை வரவேற்கும் வண்ணம் நிராயுதபாணியாகக் கை கூப்பி நிற்பது மிகவும் அருமையான காட்சி. ஒரு காலத்தில் சனிபகவானை அகற்றி வேறு இடத்தில் வைப்பதற்காகப் பள்ளம் தோண்டும்போது, அந்தத் திருவுருவத்தின் அடிப்பகுதி தென்படவில்லை. சுமார் 15 அடி தோண்டியும் பீடம் பிடிபடவில்லை. எனவே அப்படியே விட்டுவிட்டார்களாம்.

இத்தலத்தில் வந்து சனீஸ்வர பகவானை வழிபட்டால் சனி தோஷம் நீங்கும். பரதமகரிஷி தன் மனைவியுடன் ஆஸ்ரமம் அமைத்து சிவனை வழிபட்டு வந்தார். புத்திரப்பேறு இல்லாத அவர், அம்பிகையே தனக்கு குழந்தையாக பிறக்க வேண்டுமென விரும்பினார். தன் கோரிக்கை நிறைவேற சிவனை வேண்டி ஒரு யாகம் நடத்தினார். அவரது வேண்டுதலை ஏற்ற சுவாமி, யாகத்தில் அம்பிகையை தோன்றச் செய்தார்.

மகிழ்ந்த மகரிஷி, குழந்தைக்கு பரிமளசுகந்தநாயகி எனப்பெயரிட்டு வளர்த்தார். அவள் மணப்பருவம் அடைந்தபோது, சிவனிடம் திருமணம் செய்து கொள்ளும் படி வேண்டினார். சிவனும் அம்பிகையை மணக்க பூலோகம் வந்தார். மகரிஷியிடம் முறைப்படி பெண் கேட்டார். அவரும் ஒப்புக் கொண்டார். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் இத்தலத்தில் நடந்ததும், இதனால் இத்தலத்தை நிச்சயதார்த்த கோயில் என்று அழைக்கிறார்கள்.

திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வழிபட விரைவில் நல்ல வரன் அமைந்து, திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை. நிச்சயதார்த்தம் செய்த பிறகு, பிரச்னையின்றி திருமணம் நடக்கவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். இத்தலத்தில், சிவபெருமான் அக்னி சொரூபமாக காட்சி தருவதால், தீ தொடர்பான பணியில் இருப்பவர்கள் ஆபத்து வராமல் இருக்கவும், தீ விபத்தைச் சந்தித்தவர்கள் மன நிம்மதிக்காகவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்க உடலில் குறிப்பிட்ட உஷ்ணம் அவசியம். உடலில் வெப்பம் அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் உடல் நலக்குறைவு ஏற்படும். இவ்வாறு உஷ்ணத்தால் நோய் ஏற்பட்டவர்கள் நிவர்த்திக்காகவும் இங்கு வழிபடுகிறார்கள். இத்தகைய பெருமைவாய்ந்த இந்த கோயிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வரும் 10.09.2023 அன்று நடைபெறவுள்ளது. அதில் அனைவரும் கலந்துகொண்டு இறைவனின் அருளை பெற கேட்டுக் கொள்கிறோம். மயிலாடுதுறையிலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் குத்தாலம் உள்ளது.

தொகுப்பு: கண்ணன்

The post திருமண வரமருளும் சோழீஸ்வரர் appeared first on Dinakaran.

Tags : Choleeswarar ,Ashtapantana ,Arulmigu Saundara Nayagi ,Parimala Sugantha Nayagi Sameta ,Arulmigu Sozhaleswara ,Swami ,Choleeswara ,
× RELATED திரிபுராந்தக சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்